#ThirupatiLaddu | நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் சோதனை!
திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்காக நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று சுமார் 6 மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சோ்க்கப்படும் நெய், தரப் பரிசோதனை செய்யப்பட்டதில், விலங்குகள் கொழுப்பு, மீன் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லட்டு பிரசாதத்துக்கான நெய் விநியோகம் செய்தது திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் என்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து ஆந்திர அரசு உத்தரவிட்டது. அத்துடன் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று (செப். 20) அந்நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, திண்டுக்கல்லைச் சேர்ந்த அந்நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு பணியாளர்கள் மூலம் நேற்று (செப். 20) விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, “திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இரு தவணைகளில் எங்கள் நிறுவனத்தின் சாா்பில் நெய் அனுப்பப்பட்டது. எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5% மட்டுமே திருப்பதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது.
திருப்பதிக்கு அனுப்பிய நெய்யின் தரம் குறித்த ஆய்வு அறிக்கையின் தரவுகளும் எங்களிடம் உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு பல நிறுவனங்களிலிருந்து நெய் அனுப்பப்படுகிறது. இதில், எங்கள் நிறுவனம் அனுப்பியது 0.1% கூட இருக்காது. உணவுப் பாதுகாப்புத் துறை, அக்மார்க் சார்பில் எங்கள் நிறுவனத்திலுள்ள நெய்யை தர மாதிரிக்கு சேகரித்துச் சென்றனர்” எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஏ.ஆர்.டேரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் மத்திய மற்றும் மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்றும் (செப். 21) காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். 2வது நாள் சோதனையான இன்று சென்னையில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவி காலை 9.30 மணியிலிருந்து ஆய்வு செய்து வருகிறார். மேலும் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருள்களின் மாதிரிகள் அதிகமாக உள்ளதால் மேலும் சோதனை நேரம் நீடிக்கப்படும் என கூறப்படுகிறது.