#Thiruparankundram சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம் - ஏராளமானோர் பங்கேற்பு!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று (நவ.2) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கந்த சஷ்டி விழா. இந்த விழா இன்று (நவ.2) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை 8.30 மணியளவில் அனுக்கை பூஜை, துவங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர், உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணியளவில் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர்.
விழாநாட்களில் தினமும் சண்முகருக்கு பகல் 11 மணியளவிலும், மாலை 6 மணியளவிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல் வாங்குதல் நிகழ்ச்சி வரும் 6 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. மறுநாள் (நவ.7) மாலை 6.30 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளான நவ.8 ஆம் தேதி காலை 9 மணியளவில் சிறிய சட்டத் தேரோட்டமும், மாலை 3 மணியளவில் பாவாடை தரிசனமும் நடைபெறும். இன்று காப்பு கட்டிய பக்தர்கள் கோயிலில் தங்கி விரதம் இருப்பர். பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக பந்தல் அமைக்கப்பட்டு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.