ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டாள் கோயில் முக்கிய நிகழ்ச்சியில் ஆடிப்பூரத் தேரோட்டதிற்கு பின் முக்கியமாக கருதப்படுவது ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் ஆகும்.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான திருக்கல்யாண திருவிழா கடந்த 8 நாட்கள் சிறப்பாக நடைபெற்ற நிலையில் விழாவின் 9வது நாளான பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கல்யாணக் நிகழ்ச்சி ஆடிப்பூர கொட்டகையில் நடைபெற்றது.
முன்னதாக திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டுச்சேலை ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு கோவிந்தா கோஷம் முழங்க திருக்கோயில் அர்ச்சகர் சுதர்சன பட்டர் திருமாங்கல்யத்தை ஆண்டாளுக்கு அணிவித்தார். முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த
திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றால் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கட்டாயம் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம் ஆகும்.
ஆகையால் ஏராளமான ஆண்கள், பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்த உடன் பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது.