#Thiruchendur | விண்ணை முட்டும் கோஷங்களோடு கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம்!
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானிற்கு உகந்த திருவிழாவாகக் கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும் முருகப்பெருமானின் திருத்தலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு இன்று (07.11.2024) நடைபெற்றது. அதாவது முருகப்பெருமான், அசுரனை வதம் செய்து அறத்தை நிலைநாட்டுவது சூரசம்ஹாரம் ஆகும். இந்த நிகழ்வைக் காண்பதற்காகத் தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல் திருச்செந்தூரில் குவிந்தனர். இந்நிகழ்வில் யானை முகத்தைத் தொடர்ந்து சிங்க முகத்துடன் அசுரன் வந்தார்.
அதனைத் தொடர்ந்து தன்முகத்துடன் வந்த சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார். இதன்மூலம் சூரபத்மனை முருகப்பெருமானை வதம் செய்து ஆட்கொண்டார்.
சூரனை முருகப்பெருமான் வதம் செய்தபோது அங்குக் கூடி இருந்த பக்தர்கள், ‘அரோகரா... அரோகரா’ என விண்ணை முட்டும் அளவிற்கு முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் சென்னை, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.