தீரன் சின்னமலை நினைவு தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் 1756 ஆம் ஆண்டில் பிறந்த தீரன் சின்னமலை, இளம் வயதிலேயே ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். மைசூர் ஸ்ரீரங்கப் பட்டணத்தை ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடந்த போரில் திப்பு சுல்தான் வெற்றி பெறுவதற்கு பெருமளவில் உதவிகளை செய்தார்.
1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர்.
இந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அனுசரிக்கப்படுகிறது. தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதையை செலுத்தியுள்ளார்.
சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலையின்கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.