“அறுபது ஆகிடுச்சு... ஆனாலும் லவ் ஜோடி தான்” : பிரெஞ்சுக்காரர் - ஆப்பிரிக்க பெண்ணுக்கு தமிழகத்தில் திருமணம்!
பிரான்ஸ் நாட்டின் மாண்ட்பெல்லியர் நகரை சேர்ந்த 69 வயது முதியவர் யுவெஸ்
அர்னெய்ல் லே. அதேபோல் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள டோகோ நாட்டின் தலை நகரான லோமேவை சேர்ந்தவர் 60 வயதான ஜூலியென் சரெளனா லே. இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மாண்ட்பெல்லியர் நகரத்தில் மானாமதுரை அருகேவுள்ள அ.விளாக்குளம் கிராமத்தை சேர்ந்த மார்க் அமலன் என்பவர் தங்கி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் யுவெஸ் அர்னெய்ல் லேவுக்கும் அமலன் இருவருக்கும் இடையே
நட்பு ஏற்பட்டுள்ளது. அச்சமயம் நமது தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம்
குறித்து அடிக்கடி மார்க் அமலன் முதியவர் யுவெஸ் அர்னெய்ல் லேவிடம்
கூறியுள்ளார்.
இதில் தமிழர்களின் கலாச்சாரம் பிடித்து போகவே அதன்படியே தானும்
திருமண பந்தத்தில் இணைய எண்ணிய முதியவர் தன்னுடைய 60 வயது காதலியான ஜூலியென் சரெளனா லே யுடன் இந்தியா வந்ததுடன் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்று வழிபாடு செய்தார்.
தொடர்ந்து தனது நண்பரான மார்க் அமலனின் சொந்த கிராமமான அ.விளாக்குளத்திற்கு வருகை தந்து, அமலனின் பெற்றோர்களின் உதவியுடன் மானாமதுரை அருகே தாயமங்களம் சாலையில் உள்ள நவத்தாவு அழகாபுரி நகர் முருகன் கோயிலில், தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தாளி கட்டி, மாலை மாற்றி, மெட்டி அணிவித்து திருமணம் செய்துகொண்டனர்.
அந்த திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்திய அருகில் உள்ள முத்துராமலிங்கபுரம், பீக்குளம், மேலப்பிடாவூர், பிள்ளத்தில் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு விருந்தளித்தும் உபசரித்தனர். நாடு, இனம், மொழி, வயது கடந்து நடைபெற்ற இந்த ஜோடிகளின் திருமணத்தில் அனைவரும் ஆச்சர்யத்துடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி சென்றனர்.