"நாட்டுக்கே ஒரே தேர்தல் என்ற நிலையை உருவாக்க நினைக்கிறார்கள்" - முதலமைச்சர் #MKStalin பேச்சு
திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு சென்னை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ளே செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒரு நாடு, ஒரு தேர்தல், ஆளுநர் ரவி விவகாரம் ஆகியவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி மேடையில் பேசியதாவது,
"பாஜக-வின் செயல்திட்டம் பெரும்பாலும் குறுகியகால செயல்திட்டமாக இருக்காது, நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவோம் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல் என்று சொல்லும் நிலையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றை ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும். இது தனிமனிதர் ஒருவரிம் அதிகாரத்தை கொண்டு போய் சேர்க்கும்.
பாஜக என்ற கட்சிக்கே இது நல்லதல்ல. பாஜகவும், பாஜகவுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கக் கூடிய வலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. அவர்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என இந்த கூட்டத்தின் வாயிலாக நான் கோரிக்கை வைக்கிறேன்.
பாஜகவை ஆதரிப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் இந்தியாவின் கூட்டாட்சி கருத்தியலுக்கு முரணான சட்டங்களை மக்களாட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் கட்சிகளும் ஆதரிக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி கருத்தியலுக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நாம் இறுதிவரை எதிர்க்க வேண்டும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.