தேசிய கீதத்துடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவு... ஜன.11 வரை சட்டப்பேரவை நடைபெறும் என அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப் பேரவை வரும் ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். ஆனால் அவர் தனது உரையை நிகழ்த்தாமலேயே பேரவையில் இருந்து வெளியேறினார். எனவே ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் பேரவையில் உரையாற்றினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. பின்னர் சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப் பேரவை வரும் ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.
மேலும், நாளை மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இரங்கல் தெரிவிக்கப்படும் எனவும் அதனை தொடர்ந்து சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் சட்டப்பேரவை நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். முதல் 3 நாட்கள் கேள்வி நேரம் இருக்கும் எனவும் அவர் அறிவித்தார்.