"எனக்கு டார்ச்சர் செய்கிறார்கள்" - சந்திர பிரியங்கா வீடியோவால் பரபரப்பு!
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, இரண்டு அமைச்சர்கள் தனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஒரு காணொலியை வெளியிட்டுப் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சந்திர பிரியங்கா அந்தக் காணொலியில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் கடுமையானவை. அவர், "புதுச்சேரியில் இரண்டு அமைச்சர்கள் எனக்கு பயங்கர டார்ச்சர் கொடுக்கிறார்கள். நான் செல்லும் பாதையில் கண்காணித்து, என்னைச் சுற்றி உளவாளிகள் உள்ளனர். நான் பாதுகாப்பான இடத்தில் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு பெண் கஷ்டப்பட்டு அரசியலில் வளர்ந்து வந்துவிடக் கூடாது என தன்னை இழிவுபடுத்துவதாகவும், அமைச்சராக இருந்தபோது சந்தித்த பிரச்சனைகளைக்கூட வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் என். ரங்கசாமியின் மீது அதிருப்தி தெரிவித்துள்ள சந்திர பிரியங்கா, "நான் ஒதுங்கி இருந்தும் என்னைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை என்று அவர்கள் டார்ச்சர் கொடுக்கிறார்கள். முதல்வர் அவர்களுக்காகப் பொறுத்துப் போகிறார். அனைத்தும் தெரிந்தும் முதல்வரும் பொறுத்துப் போகிறார்," என்று கூறியுள்ளார். இது ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் அளிக்கச் சென்றபோது, காவல் துறை அதிகாரிகள் கிண்டலாகப் பேசியதாகவும் சந்திர பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார். "உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுக்கச் சென்றால், போலீஸ் அதிகாரி கிண்டலாகப் பேசுகிறார்," என்று குறிப்பிட்டு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.
சந்திர பிரியங்காவின் இந்தக் காணொலி, எதிர்கட்சிகளிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆளும் கூட்டணியில் உள்ள இந்த உள் பூசல்கள், எதிர்காலத்தில் புதுச்சேரி அரசியலில் மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.