Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’இந்த வாரம் ரிலீஸான 10 படங்கள்’.. மினி ரிவியூ இதோ ..!

கோலிவுட்டில் இந்த வாரம் ஆக்‌ஷன், திரில்லர், காமெடி என பல ஜானர்களில் ரவுண்டு கட்டி 10 படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக
07:01 PM Aug 03, 2025 IST | Web Editor
கோலிவுட்டில் இந்த வாரம் ஆக்‌ஷன், திரில்லர், காமெடி என பல ஜானர்களில் ரவுண்டு கட்டி 10 படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக
Advertisement

கோலிவுட்டில் இந்த வாரம் ஹவுஸ்மேட்ஸ், சரண்டர், அக்யூஸ்ட், உசுரே, சென்னைபைல்ஸ் முதல் பக்கம், போகி, கிங்டம், மிஸ்டர் ஷூ கீப்பர் மற்றும் அம்பிகாபதி, மீஷா ஆகிய 10 படங்கள் வெளியாகி உள்ளன. இதில் எதை பார்க்கலாம். எதை தவிர்க்கலாம். இந்த படங்களின் மினி ரிவியூ இதோ

Advertisement

’ஹவுஸ்மேட்ஸ்’

சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் வெளியிட, புதுமுக இயக்குனர் டி. ராஜவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ஹவுஸ்மேட்ஸ். தர்ஷன், அர்ஷா பைஜூ தம்பதியினர் ஒரு பழைய பிளாட்டை வாங்கி குடியேறுகிறார்கள். அதே பிளாட்டில் ‘‘நாங்கள் இங்கேஇருக்கிறோம். நீங்க யாரு ’’ என்ற குரல்கள் கேட்கின்றனர். அது பேய் என நினைத்து பதறுகிறார்கள். எதிர்பக்கமோ காளிவெங்கட், வினோதினி தம்பதியினர் ‘நம்ம வீட்டுல புதுசா யாரு என்று பயப்படுகிறார்கள். அதாவது, ஒரே வீட்டில் 2012 காலகட்டத்தில் காளிவெங்கட் தம்பதியினரும், 2022ல் தர்ஷன் தம்பதியினரும் இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம். இப்படி வசிப்பதால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை காமெடி,அமானுஷ்யம், அறிவியல்,சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். இதுவரை வராத திரைக்கதையும், ஒரே வீட்டில் இரண்டு காலகட்டத்தில் வசிப்பதால் ஏற்படும் சண்டை, சச்சரவுகளும் புதிதாக உள்ளது. காளிவெங்கட், வினோதினியின் நடிப்பும், அவர்கள் அடிக்கும் காமெடிகளும் ரசிக்கும்படி இருக்கிறது. தர்ஷனும், அர்ஷாவும் நன்றாக நடித்து இருக்கிறார்கள். இவர்களை தவிர, அப்துல் லீ, தீனா, வீடு பார்க்க வரும் காமெடி நடிகர் டிஆர்எஸ் நடிப்பும் கவர்கிறது. காளிவெங்கட் மகனாக வரும் சிறுவனும் கவர்கிறான். வழக்கமான படங்கள் பார்த்து போரடித்தவர்களுக்கு இந்த கதை, இதில் சொல்லப்படும் விஷயம் பிடிக்கும். சில சமயம் கதை குழம்ப வைப்பதுமைனஸ்.ஆனாலும், புதுவிதமான கதை, அவ்வப்போது நடக்கும் காமெடி, சண்டை, கிளைமாக்சில் வரும் எமோஷனல் சீன் படத்துக்கு பிளஸ். தாரளமாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

’சரண்டர்’

தர்ஷன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு துப்பாக்கி காணாமல் போகிறது. அதை தேடி தர்ஷன், போலீஸ் ஏட்டுலால் அலைகிறார்கள். இன்னொரு பக்கம் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்காக வைக்கப்பட்டிருந்த 10கோடி பணம் காணாமல் போக, அதை தேடி அலைகிறார் தாதாவான சுஜித் சங்கர். துப்பாக்கியும், 10 கோடி பணமும் கிடைத்ததா? அதை திருடியது யார்? இரண்டு சம்பவங்களுக்கு என்ன தொடர்பு என்ற மாறுபட்ட திரில்லர் கோணத்தில் செல்கிறது சரண்டர் கதை.தர்ஷன், லால், போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.சங்கர், வில்லன் சுஜித் நடிப்பு படத்தை ரசிக்க வைக்கிறது. ஆரம்பம் முதல் கடைசி வரை தேடல், சேசிங், துப்பறிதல், திருப்பங்கள் என கதை வேகமாக நகர்கிறது. அறிவழகன் உதவியாளர் கவுதம்கணபதி இயக்கியுள்ளார். முனிஸ்காந்த காமெடி போன்ற சில வேகத்தடைகள் இருந்தாலும், போலீசை மட்டம் தட்டும் சில சீன்கள் இருந்தாலும், அதை தவிர்த்து திருப்பங்களுடன் வேகமாக ஓடும் கதையை ரசிக்க முடிகிறது. போலீஸ் சம்பந்தப்பட்ட பல கதைகள் வந்தாலும் இதில் சொல்லப்படும் விஷயங்கள் புதுமை. திரைக்கதையும், பல நடிகர்களின் நல்ல நடிப்பும் ‘இது நல்ல படம், கண்டிப்பாக பார்க்கலாம்’ என சொல்ல வைக்கின்றன.

’கிங்டம்’

இலங்கையில் உளவு பார்க்க செல்கிறார் போலீசாக இருக்கும் விஜய்தேவரகொண்டா. அங்கே கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை செய்யும் அந்த கூட்டத்தின் தலைவராக இருப்பவன் விஜய்தேவரகொண்டாவின் அண்ணன் சத்யதேவ். அண்ணன், தம்பி பாசம் என்ன செய்கிறது. இலங்கையில் அந்த கூட்டத்திற்கு வரும் பிரச்னைகள் என்ன? அவர்களை பழி வாங்க நினைக்கும் கடத்தல் கும்பல் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆக் ஷன் கலந்து சொல்லும் படம் கிங்டம். இப்படத்தை கவுதம் இயக்கி உள்ளார். மேலும், அனிருத் இசையமைத்து இருக்கிறார். இரண்டுபேருமே சொதப்பி இருக்கிறார்கள். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, வன்முறை, ஓவர் பில்டப் சீன்களால் தடுமாறுகிறது. கிளைமாக்ஸ் குழப்பம். விஜய்தேவராகொண்டாவின் சில ஆக் ஷன், தங்கம் கடத்தும் சீன்கள் மட்டுமே ஆறுதல். ஆக் ஷன் தவிர, கமர்ஷியல் படங்களுக்கு உரிய காமெடி, கலர்புல் பாடல்கள் இல்லை. ஆக் ஷன் சீன்களிலும் ரத்தம் தெறிகிறது. கிளைமாக்ஸ் பெரிய ஏமாற்றம். இலங்கையை மட்டும் அழகாக காண்பித்து இ ருக்கிறார்கள். பெரிய நடிகர், பெரிய டீம், பெரிய பட்ஜெட். ஆனாலும், படம் பெரிய ஏமாற்றம்.

’உசுரே’

நவீன் டி கோபால் இயக்கத்தில் டீஜே அருணாசலம், பிக்பாஸ் ஜனனி, மந்த்ரா மற்றும் பலர் நடித்த மாறுபட்ட காதல் படம் உசுரே.தனது எதிர்வீட்டில் குடியேறும் ஜனனியை காதலிக்கிறார் ஹீரோ டீஜே அருணாசலம். ஹீரோயின் ஜனனி அம்மா அதை எதிர்க்கிறார். தடைகளை மீறி காதலியை கரம்பிடித்தாரா ஹீரோ என்பது கிளைமாக்ஸ். தமிழக, ஆந்திர எல்லையில் நடந்த ஒரு உண்மை சம்பவம் பின்னணியில் கதை உருவாகி உள்ளது. ஆகவே, படப்பிடிப்பும் சித்துார் சுற்றுவட்டாரத்தில் நடந்து இருக்கிறது. இதுவரை சித்துாரை இப்படி அழகாக யாரும் காண்பித்தது இல்லை. அந்த மக்களின் வாழ்க்கை, நண்பர்கள், அம்மன் திருவிழா என பல புது விஷயங்கள் இருக்கின்றன. டீஜே நடிப்பு, டான்ஸ் ஓகே. ஜனனிக்கு நடிக்க அதிக வாய்ப்பு இல்லை. மந்த்ராவின் மாறுபட்ட நடிப்பும், கிளைமாக்சும்தான் படத்தின் பலம். இப்படியெல்லாம் நடக்குமா? அம்மா இப்படியெல்லாம் செய்வாரா என்ற கேள்வி அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஜனனியும் கடைசி சில சீன்களில் ஸ்கோர் செய்து மனதில் நிற்கிறார். காதல், நட்பு, சித்துார் வாழ்க்கை என கொஞ்சம் வித்தியாசமான படமாக இருக்கிறது. ஆனாலும் காட்சிகள் மெதுவாக நகர்வதும், காதலை அழுத்தமாக சொல்லாததும் படத்தின் மைனஸ்

’அக்யூஸ்ட்’

புழல் ஜெயிலில் கைதியாக இருக்கிறார் உதயா. அவரை கொலை வழக்கு சம்பந்தமாக சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்து செல்கிறது அஜ்மல் தலைமையிலான போலீஸ் டீம். அப்போது உதயாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. அவர்கள் யார்? உதயா கொலை செய்தது யாரை? என்ன காரணம்? உதயாவை காப்பாற்றி கோர்ட்டில் ஆஜர் படுத்தினாரா அஜ்மல் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது பிரபுஸ்ரீனிவாஸ் இயக்கிய அக்யூஸ்ட் கதை. அக்யூஸ்ட் கேரக்டரில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் உதயா. அவரின் காதல் காட்சிகள், டான்ஸ் ஈர்க்கிறது. அவருக்கும் அஜ்மலுக்கும் இடையேயான சீன்கள் ரசிக்க வைக்கிறது. தன் வசம் உள்ள கைதியை காப்பாற்ற போராடுகிற கேரக்டரி்ல அஜ்மலும் சிறப்பாக நடித்து இருக்கிறார். சில சீன்களில் வந்தாலும் யோகிபாபு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். ஹீரோயின் ஜான்விகா டான்ஸ் அருமை. இடைவேளைக்குபின் படத்தின் வேகம் குறைவதும், அரசியல் சம்பந்தப்பட்ட சீன்கள் வழக்கமாக இருப்பது மைனஸ். கிளைமாக்ஸ் மனதில் பதியாமல் இருப்பதும் படத்தின் மைனஸ்.

’சென்னை பைல்ஸ் முதல் பக்கம்’

சென்னையில் தொடர்ச்சியாக சில கொலைகள் நடக்கின்றன. அந்த கொலையாளி யார்? கிரைம் கதை எழுத்தாளர் மகனான ஹீரோ வெற்றி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பிராமையாவுடன் இணைந்து அந்த கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் கொலைக்கான காரணம் என்ன? கடைசியில் கொலையாளிக்கு என்ன ஆனது என்பதை கிரைம் திரல்லர் பாணியில் விவரிக்கிறது சென்னை பைல்ஸ் முதல்பக்கம. அனிஸ் அஷ்ரப் இயக்கி இருக்கிறார். பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கிளைமாக்ஸ் கரு, பெண்கள் பாதுகாப்பாக,உஷாராக இருக்கணும்.சுற்றிலும் தவறான ஆட்கள் இருக்கிறார்கள் என்ற திரைக்கதை ஓகே. ஆனால், அதை விறுவிறுப்பு இல்லாமல் சொல்லியிருப்பது போராடிக்கிறது. கிளைமாக்ஸ், தண்டனை கொடுக்கும் காட்சிகளில் மட்டுமே ஹீரோ வெற்றி பாஸ் மார்க் வாங்குகிறார். தனது மகள் பாசம், அவளை இழந்து தவிக்கிற சீன்களில் தம்பிராமையா முத்திரை பதித்து இருக்கிறார்.வில்லனாக நடித்த மகேஷ்தாஸ் நடிப்பு ஓகே. மற்றபடி, சுமாரான படம்.

’போகி’

மலைவாழ் கிராமத்தில் இருந்து டாக்டர் ஆகும் சுவாசிகாவுக்கு சென்னையில் நடக்கும் விபரீதம். கொடூர மனம் படைத்த வில்லன் அன் கோவை சுவாசிகா அண்ணனும், அவர் காதலனும் எப்படி பழி வாங்குகிறார்கள் என்பது போகி கதை. விஜயசேகரன் இயக்கி உள்ளார். பல ஆண்டு கிடப்பில் இருந்த படம் இப்போதுதான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆகவே, பல காட்சிகள் கோர்வையாக இல்லை. வில்லன் டீம் அட்டகாசம், அவர்களின் திட்டம், அவர்களுக்கு ஹீரோ கொடுக்கிற தண்டனை போன்றவை மட்டுமே ஆறுதல். கிராமத்து காட்சிகளில் சுவாசிகா நடிப்பு ஓகே. மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை.

’ஷூ கீப்பர்’

விஜய்டிவி புகழ் கதைநாயகனாக நடித்த மிஸ்டர் ஷூ கீப்பர் இந்த வாரம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அப்பாவியான புகழ் ஒரு புலிக்குட்டியை பூனைக்குட்டி என நினைத்து வளர்க்கிறார். ஒரு சில காரணங்களால் புகழையும்,அவர் மனைவியையும் போலீஸ், வனஇலாகா துரத்துகிறது. என்ன காரணம், அந்த புலிக்குட்டிக்கு என்ன ஆனது. புகழ் தப்பித்தாரா என்பதை சொல்கிறது கதை. சுரேஷ் இயக்கி உள்ளார். இதில் புகழ் காமெடி பண்ணவில்லை. அவருக்கு சீரியஸ் ரோல். ஆகவே, ரசிகர்கள் எதிர்பார்ப்பது படத்தில் அதிகம் இல்லை.

’மீஷா’

மலையாளத்தில் பரியேறும்பெருமாள் கதிர் நடித்த மீஷா படமும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. கேரளாவி்ல் நிலவும் அரசியல், அதனால் பாதிக்கப்படும் இளைஞர்கள், அரசியல்வாதிகளின் சூழ்ச்சி, மான்வேட்டை, நட்பு போன்றவிஷயங்களை பேசுகிறது மீஷா.எம்.சி.ஜோசப் இயக்கி உள்ளார். மலையாள பட ப்ரியர்களை மீஷா ஏமாற்றாது.

’ராஞ்சனா’

இந்த படங்கள் தவிர, இந்தியில் தனுஷ் நடித்து 2013ல் வெளியான அம்பிகாபதி படமும் ரீரிலீஸ் ஆகியுள்ளது.காசி புரோகிதர் மகன் தனுஷ், முஸ்லீம் பெண் சோனம்கபூர் காதல், அரசியல், பிரச்னைகளை சொல்கிறது அம்பிகாபதி. ஏ.ஆர்.ரகுமான் இசை படத்தை ரசிக்க வைக்கிறது.

 

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்

 

 

Tags :
ciniamanewshousematesKingdomMovieReviewthisweekzeekeeper
Advertisement
Next Article