"இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் இவர்கள் தான்" - ஆர்.கே.செல்வமணி பேச்சு
சங்கர் சாரதி இயக்கத்தில் சேத்தன், ஆஷ்னா சவேரி நடிக்கும் 'வள்ளுவன்' பட பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி கலந்துக்கொண்டார். பின்னர் விழா மேடையில் அவர் பேசியதாவது,
“படத்தின் அழைப்பிதழ் கொடுத்து என்னை அழைத்தபோது அதைப் பார்த்ததும் இது ஒரு டாக்குமெண்டரி படம் போல இருக்கிறதே என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் டிரைலரைப் பார்த்ததும் ஒரு பிரம்மாண்ட ஆக்சன் படத்தை பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்கே இந்த படம் குறித்து ஆரம்பத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது இல்லையா? அதனால் இந்த படத்தை பற்றி மீடியா புரமோஷன்களில் பேசும்போது, இது எந்த மாதிரியான படம் என்பதை தெளிவாக ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் அந்த தரப்பு ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க தேடி வருவார்கள்.
இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் புதிய தயாரிப்பாளர்கள் தான். கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 2500 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இதில் 2100 பேர் புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் எங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை வருடங்களில் அப்படி முதல் படம் எடுத்த 2000 பேர் அப்படியே போய் விட்டார்கள். வெறும் 400 பேர் தான் மீண்டும் படம் எடுக்கத் திரும்பி வருகிறார்கள்.
ஒரு மரம் நட்டால் வளர்ந்து பிறகு பல வகைகளில் பலன் தரும். எதுவுமே இல்லை என்றாலும் நிழல் தரும் வேலையையாவது செய்யும். இசையமைப்பாளர்களுக்கு கூட அவர்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் குடும்பத்திற்கும் செல்லும் விதமாக ராயல்டி பணம் வந்து கொண்டிருக்கும். ஆனால் தயாரிப்பாளர்களின் நிலை அப்படி அல்ல. நன்றாக சம்பாதிக்கும் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் ஐந்து அல்லது பத்து சதவீதம் தொகையைத் தங்களை ஆளாக்கிய தயாரிப்பாளர்களுக்குத் தர வேண்டும் என ஒரு சிஸ்டம் கொண்டு வந்தால் தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் நன்றாக இருப்பார்கள்.
இங்கே சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல் இருக்கிறது. ஆனால் குற்றவாளி வந்தால் அவனை ராஜா போல பார்க்கிறார்கள். நம்முடைய சிஸ்டம் அப்படி இருக்கிறது. நான் ஒரு படத்திற்காக சிறைச்சாலை சென்று கைதிகளை சந்தித்தபோது, ஒரு கொலைக் கைதியிடம் திட்டமிட்டுக் கொலை செய்தாயா? என்று கேட்டேன். அதற்கு அவன் திட்டமிட்டு கொலை செய்தால் அவர்கள் வெளியே இருக்கலாம் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்பவர்கள் தான் இங்கே உள்ளேயே இருக்கிறார்கள் என்று சொன்னார். அதைத்தான் இந்த படத்தில் அழகான கருவாக எடுத்து இருக்கிறார்கள்.
சமீபகாலமாக ஏஐ மூலம் நடிகைகளை ரொம்பவே ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன செய்யப்போகிறது? அமெரிக்காவில் என்னுடைய மகள் தற்போது ஏஐ தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் என்னிடம் மனித குலத்திற்கே எதிரான ஒரு விஷயத்தைத் தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் எல்லோர் கையிலும் கத்தி இருக்கும். அவனுக்கான நீதியை அவனே தேடிக் கொள்ளும் சூழலுக்கு நாடு தள்ளப்படும். இந்த படத்தில் அதைத்தான் சொல்கிறார்கள். இங்கு யாரும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வாங்குவதில்லை. கொஞ்சம் பிரபலம் ஆகும்போது பிளாக் மெயில் செய்து உயர்வான ஊதியத்தை பெறுகிற சூழல் தான் இங்கே இருக்கிறது”
இவ்வாறு இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.