“டாஸ்மாக்கில் தவறுகள் நடக்கவில்லை, ED சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார்” - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை நேற்று(மார்ச்.13) அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை பொத்தாம் பொதுவாக சொல்லியிருக்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மாநில் அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் முகமூடிகளை தோலுறித்து காட்டும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கம் தமிழ்நாட்டு அடித்தட்டு மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவி டாஸ்மாக்கில் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை செய்திக் குறிப்பில், பல்வேறு முதல் தகவல் அறிக்கையில் பவ்வேறு பிரிவுகளில் பதியப்பட்ட வழக்கு என்று குறிப்பிட்டுள்ளனர். அதன் விவரம் முழுவதுமாக தெரிவிக்கப்படவில்லை. அதே போல் பணியிடை மாற்றத்தை பொறுத்தவரை குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்கள் போன்ற காரணங்களால் டாஸ்மாக் நிறுவனம் பணியிடை மாற்றம் செய்துள்ளது. அதில் எந்தவித தவறுகளும் இல்லை. ஆனால், தவறு நடந்ததுபோல் தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.
ட்ரான்ஸ்போர்ட் வெளிப்படைதன்மையோடு கொடுக்கப்பட்ட டெண்டர். அதில் எந்தவித முறைகேடும் இல்லை. ஆனால், அதிலும் ஆவணங்களை எடுத்திருப்பதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. மதுபான உற்பத்து ஆலைகளுக்கும் பாட்டில் கொள்முதல் ஆலைகளுக்கிடையே இருக்கும் வணிகம் எங்களுடைய நிறுவனத்திற்கு வெளியில் நடந்ததை வைத்து கூடுதலாக கொள்முதல் ஆணைகளை பெற்றதைபோல் தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
நான்கு ஆண்டு காலத்தில் பார் டெண்டராக இருந்தாலும் அது முழுவதுமாக ஆன்லைன் டெண்டராக மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக சொல்லியிருக்கும் அந்த 1000 கோடி ரூபாய் முறைகேடு என்பது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக சொல்லியிருக்கிறார்கள். முன்னதாக ஒருவர் 1000 கோடியை பேட்டியில் சொல்லுகிறார். பின்னர் அமலாத்துறை அதே தொகையை கூறுகிறார்கள். அதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருப்பது நமக்கு நன்றாக என்று நம்புகிறேன். அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். வெளிப்படைத் தன்மையுடன் டாஸ்மாக் செயல்பட்டுகொண்டிருக்கிறது. டாஸ்மாக்கில் எந்தவித தவறுகளும் நடக்கவில்லை”
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.