“மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை” - உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!
ஆளுநர் ஆர். என்.ரவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து, கடந்த 10ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் தரப்பு தங்களது எழுத்து மூலமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அதன்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுத்து மூலமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வாதத்தில்,
“அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது. அரசியல் சாசன பிரிவு 200- ல் குறிப்பிடப்பட்டுள்ள discretion என்ற வார்த்தை ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தை குறிக்கிறது.
எனவே ஆளுநர் ஒவ்வொரு முறையும் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் அடிப்படையில், ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால் அந்த மசோதா செயலிழந்து விட்டது என்று அர்த்தம். எனவே காலாவதியான மசோதாவை மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பும்போது, அதன் மீது ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அவ்வாறு மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முழு அதிகாரமும் ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதாக்கள் ஒப்புதல் வழங்க வேண்டும் என பஞ்சாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பொருந்தாது.
தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிரான இந்த வழக்குகளை நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து விசாரிக்கலாம்” என்று தனது எழுத்து பூர்வ வாதத்தில் தெரிவித்துள்ளார்.