”மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை”- அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு..!
தமிழக அரசு கடந்த 2021-22 கல்வி ஆண்டு முதல் வெற்றிப் பள்ளிகள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகம், டிஜிட்டல் கரும்பலகை, விளையாட்டு மைதானம், உறைவிட வசதிகள் என மாணவர்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்புகளும் ஒரே வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். மேலும் நீட்,ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படுகின்றன.
முன்னதாக தமிழ்நாட்டில் 414 வட்டாரங்களில் 500 வெற்றிப்பள்ளிகள் நிறுவப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. முதற்கட்டமாக இந்த ஆண்டு 236 வட்டாரங்களில் உள்ள 369 பள்ளிகள் வெற்றிப் பள்ளிகளாக செயல்பட உள்ளது. அதற்கான விழா இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் நாகை எம்பி செல்வராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இவ்விழாவில் வெற்றிப் பள்ளிகளை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,
”43 லட்சம் தமிழக மாணவர்கள்,32000 ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பயன்பெற வேண்டிய 2152 கோடி நிதியை மத்திய அரசு தரவில்லை. நிதியை கொடுக்காமல் சில கொள்களை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துகின்றனர். நீங்கள் சொல்லும் மும்மொழி கொள்கைகளை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. 2000 கோடி அல்ல 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் கூட தேவையில்லை என்று சொல்லக்கூடிய முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றுள்ளது. எங்களுடைய பிள்ளைகள் கல்விக்கு தடையாக யார் வந்தாலும் தயவு செய்து ஒதுங்கி கொள்ளுங்கள். எங்கள் பிள்ளைகள் எல்லாம் மேலே ஏறி வந்து கொண்டிருக்கிறார்கள்”
என்று பேசினார்.