“காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதை விட மகிழ்ச்சியான செய்தி இல்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதை விட மகிழ்ச்சியான செய்தி இருக்க முடியாது என மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரும், திட்டக் குழுவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 5வது மாநில திட்டக்குழு கூட்டம் இன்று (ஆக., 6) நடைபெற்றது. திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து இந்த மாநில திட்டக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் ஆக., 9-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இருக்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஆட்சிக்கு முக்கிய வழிக்காட்டியாக திட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சி சக்கரத்தை திமுக நடத்தினாலும், எங்களின் முக்கிய வழிகாட்டி மாநிலத் திட்டக்குழு தான். திமுக ஆட்சியின் நிறை, குறைகளை எடுத்துச்சொல்வது மாநிலத் திட்டக்குழு. மாநில திட்டக்குழு அறிக்கைதான் திமுக அரசின் மதிப்பெண் சான்றிதழ்.
மகளிர் உரிமைத்தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது. கட்டணமில்லா விடியல் பேருந்து மூலம் பெண்களின் சமூக வாய்ப்பளிப்பு அதிகரித்துள்ளது.
அரசின் ஒவ்வொரு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியை கண்டுள்ளனர். மாநில திட்டக்குழுவின் மூலம் நான் எதிர்பார்ப்பது புதிய திட்டங்களை தான். கவனம் பெறாத துறைகளுக்கான புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.