“சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை!” - உயர்நீதிமன்றம் உத்தரவு
நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக தங்கவேலு இருந்த போது பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்ததாக அரசு புகார்கள் வந்தது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை பரிந்துரை செய்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. முன்னாள் பதிவாளர் தங்கவேலு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், ஓய்வு பெற உள்ள நிலையில் தன்னை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டதாக வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி உயர் கல்வித் துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு, தற்போதைய பதிவாளர் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தான் முடிவெடுக்க வேண்டும் என இந்த பரிந்துரைகள் சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எந்த தடையும் இல்லை எனவும் அவருக்கு எதிராக நடைபெற்ற விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.