"சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை" - #MadrasHighCourt !
சித்த மருத்துவர்கள், அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னையில், சித்த மருத்துவர் எஸ்.சிந்து என்பவரின் மருத்துவமனையில், கடந்த 2017 பிப்ரவரி மாதம் ஆய்வு செய்த மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர், மருத்துவர் சிந்து அலோபதி மருந்துகளை வைத்திருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்தார். இதனையடுத்து, மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சித்த மருத்துவர் எஸ்.சிந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
அப்போது, உரிமம் இன்றி மருந்துகளை வைத்திருந்ததற்காகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், உரிமம் இல்லாமல் மருந்துகளைப் பதுக்கி வைத்திருந்ததாகவும், விற்பனை செய்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விரைந்து விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டார். அதே சமயம், சித்த மருத்துவர்கள், அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, அதற்காக அளவுக்கு அதிகமாக அலோபதி மருத்துகளை வைத்திருக்க முடியாது எனவும் உத்தரவிட்டார்.