#TVKMaanadu | வி.சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தவெக மாநாட்டிற்காக வரும் வாகனங்களால் விக்கிரவாண்டி வி.சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் குறையாததால் தொண்டர்கள் அவதி.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியின் வி.சாலையில் தொடங்கியுள்ளது. முதல் மாநாடு என்பதாலும், தமிழ்நாடு மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மாநாட்டிற்காக நேற்று இரவு முதலே தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், பல மாநிலங்களிலிருந்தும் அவரது ரசிகர்கள் வந்தபடி இருக்கின்றனர். குறிப்பாக,கார், வேன், பேருந்து என பல்வேறு வாகனங்களில் தொண்டர்கள், ரசிகர்கள் வந்தபடி இருக்கின்றனர். மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்திவைக்க இரு பகுதிகளில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், இரு பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால், 7 கி.மீட்டர் தூரத்திலிருந்தே மாநாடு நடைபெறும் இடத்துக்கு தொண்டர்கள் நடந்து செல்கின்றனர்.
இதையும் படியுங்கள் : TVK மாநாடு | விஜய் என்ன பேசப்போகிறார்? கசிந்த தகவல்!
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 5 வழிகளில் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இதில், எண் 1 வழித்தடத்தில் தவெக மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்கள், சுங்கக் கட்டணமின்றி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டிற்கு வருகைப்புரிந்த வாகனங்கள் சுமார் 10 கி.மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணிகளில் போக்குவரத்து காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.