"வங்கியில் ஊழியர்களே இல்லை"... புகாரளித்த வாடிக்கையாளர் - ஷாக் கொடுத்த எஸ்பிஐ!
பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்ற போது அங்கு ஊழியர்களே இல்லை என்று வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்த நிலையில், இதற்கு பாரத ஸ்டேட் வங்கி கொடுத்த பதில் வாடிக்கையாளரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எனும் பெருமையை பாரத ஸ்டேட் வங்கி பெற்றுள்ளது. இந்த வங்கி நாடு முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. பொதுவாகவே வங்கிகளில் வாடிக்கையாளர்களை அதிக நேரம் காக்க வைப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவது உண்டு.
இந்த நிலையில், எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, காலியாகக் கிடந்த வங்கி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, "மதியம் 3 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் இடைவேளைக்கு சென்றுள்ளனர். உலகமே மாறினாலும் உங்கள் சேவைகளின் தரம் இந்த அளவில் தான் உள்ளது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ, "உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். எனினும், வங்கி கிளைக்குள் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இவை தவறாக பயன்படுத்தப்பட்டால் நீங்கள் பொறுப்புக்குள்ளாக நேரிடும். ஆகவே, சமூக வலைத்தளங்களில் இருந்து இந்த புகைப்படத்தை உடனே நீக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளது. இதற்கு பல விமர்சனங்களை பெற்று வருகிறது.