தீரன் சின்னமலை நினைவு தினம் - சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18 ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆடிப்பெருக்கு நாளில் மேட்டூர் அணைக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கேட்டுக் கொண்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். காவிரி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீரில் இறங்க மற்றும் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குவர்.