ரீல்ஸ்க்காக வீலிங் செய்த இளைஞர்கள்... பைக்குகளை பொதுமக்கள் பாலத்தில் இருந்து தூக்கி வீசிய #ViralVideo
பெங்களூரில் உள்ள சாலையில் வீலிங் செய்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்களின் பைக்குகளை, பொதுமக்கள் பாலத்தில் இருந்து வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டியும், வீலிங் செய்தும் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வீடியோவிற்கு கிடைக்கும் வியூஸ்காகவும், லைக்குக்காகவும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நெரிசல் மிகுந்த சாலையில் இளைஞர்கள் சிலர் அஜாக்கிரதையாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இரு சக்கர வாகனங்களில் வீலிங் செய்து ரீல்ஸ் எடுத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மக்கள், இளைஞர்களின் வாகனங்களை மடக்கிப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் கோவத்தின் உச்சிக்கு சென்ற பொதுமக்கள் இளைஞர்களின் பைக்குகளை 30 அடி உயர பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசினர். இதனையடுத்து, ஸ்டண்டில் ஈடுபட்ட இளைஞர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.