அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பிலான உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணம் பரிசளிப்பு!
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ரூ.1.65 லட்சம் பதிப்பிலான உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணம் பரிசளிக்கப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த 16-ஆம் தேதி (16.01.2024) அன்று தொடங்கின. 121 ஆச்சார்யார்கள் இச்சடங்குகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வருகிற 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ரூ.1.65 லட்சம் பதிப்பிலான உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணம் பரிசளிக்கப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தனித்துவமான இந்த புத்தக தயாரிப்பு குறித்து அந்த அயோத்தியை சேர்ந்த புத்தக வடிவமைப்பாளர் மனோஜ் சதி கூறியதாவது:
ராமயாண புத்தகம் 3 பெட்டிகளில் வைக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ராமர் கோயிலின் மூன்று தளங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காகிதம் பிரான்சில் தயாரிக்கப்பட்டது. இது அமிலம் இல்லாத காப்புரிமை பெற்ற பிரத்யேகமான காகிதம். அதே போன்று புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட மை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. புத்தக வடிவமைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட மரம் அமெரிக்க வால்நட் மரம் ஆகும். அதோடு, இந்த புத்தக வடிவமைப்பில் குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 கிலோ எடையுள்ள இந்தப் புத்தகம் 400 ஆண்டுகளுக்கு மேல் எந்தவித பாதிப்பும் இன்றி இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புத்தக வடிவமைப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.