உலகமே இந்திய இளைஞர்களை உற்று நோக்குகிறது - பிரதமர் நரேந்திர மோடி உரை!
முழு உலகமும் இந்திய இளைஞர்கள் மீது பார்வை வைத்துள்ளது, புதிய இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய திட்டங்கள், முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளை உருவாக்குவது, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களை ஈடுபடுத்துவது ஆகியவற்றுக்காக ‘2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா’ என பொருள்படும் 'விக்சித் பாரத்@2047: இளைஞர்களின் குரல்' என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்குகளில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஆசிரியகள் பங்கேற்றனர். அவர்களிடையே காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:
“வளர்ந்த இந்தியாவுக்கான தீர்மானங்கள் தொடர்பான மிக முக்கியமான நாள் இன்று. வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவது தொடர்பான இந்த பயிலரங்கை ஏற்பாடு செய்த அனைத்து ஆளுநர்களையும் நான் வாழ்த்துகிறேன். கல்வி நிறுவனங்களின் பங்கு தனிநபர்களை மேம்படுத்த வேண்டும். தனிமனித வளர்ச்சியின் மூலம் மட்டுமே தேசத்தை கட்டியெழுப்ப முடியும். தேச நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் இளைஞர்களை உருவாக்க வேண்டும். துணைவேந்தர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
முழு உலகமும் இந்திய இளைஞர்கள் மீது பார்வை வைத்துள்ளது. புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம். எனவே, இந்தியா எப்படி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை நமது இளைஞர்களுக்கு உள்ளது. இந்த உணர்வோடு, நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் "வளர்ச்சியடைந்த இந்தியா"வின் செயல் திட்டத்துடன் இணைக்க அரசு விரும்புகிறது. புதிய பாரதத்தை உருவாக்குவதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். வளர்ந்த பாரதத்தின் குறிக்கோளுக்காக 24 மணி நேரமும் உழைக்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.