“பிரக்ஞானந்தாவை கண்டு உலகமே வியக்கிறது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
நார்வே செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து முறை உலக சாம்பியன் வென்ற மேக்னஸ் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இரு முறை மோத வேண்டும். இதில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான் மேக்னஸ் கார்ல்சன், மற்றும் இரண்டாவது புகழ்பெற்ற வீரரான பேபியானோ கருவானாவையும் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். தற்போது இப்போட்டியில் முதல் 10 இடங்களில் அவர் முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் போட்டியில் அற்புதமாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாடு கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். .
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்ல்சனை வென்றதோடு, தற்போது ஐந்தாம் சுற்றில் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும் ‘கிளாசிக்கல் செஸ்’ வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பதென்பது மிகப்பெரும் சாதனையாகும்.
முதல் 10 இடங்களுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்! உங்கள் திறமையையும், திறனையையும் கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியக்கிறது”
எனக் குறிப்பிட்டுள்ளார்.