”காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை உலகம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது” - இர்ஃபான் பதான் உருக்கம்.!
”காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை உலகம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது” என இர்ஃபான் பதான் உருக்கமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடியாக தாக்குதலை தொடர்ந்தது. இந்த தாக்குதலில் பல அப்பாவி குடிமக்கள் , குழந்தைகள் , பெண்கள் உட்பட பலரும் உயிரிழந்துள்ளனர். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா பள்ளிக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரிவித்தார்.
” காசாவில் ஒவ்வொரு நாளும் 10 வயதுக்கு உட்பட்ட அப்பாவி குழந்தைகள் இறக்கிறார்கள். இவற்றை பார்த்துக் கொண்டு உலகம் அமைதியாக இருக்கிறது. ஒரு விளையாட்டு வீரனாக, என்னால் பேச மட்டுமே முடிகிறது. உலக தலைவர்கள் ஒன்றுகூடி நியாயமற்ற கொலைகளை நிறுத்த வேண்டிய மிக முக்கியமான நேரம் இது" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.