நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.25-ல் தொடக்கம்... மத்திய அமைச்சர் #KirenRijiju அறிவிப்பு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி முடிவடையும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், வருகின்ற நவம்பர் 25 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடருக்காக இரு அவைகளையும் கூட்ட குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நவம்பர் 26-ஆம் தேதி அரசிலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகளான தினத்தை கொண்டாடும் நிகழ்வு மைய மண்டபத்தில் நடைபெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தொடரில், சர்ச்சைக்குரிய வக்ஃப் திருத்த மசோதா மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இரு அவைகளிலும் இந்த மசோதாக்கள் மீது நடத்தப்படும் விவாதங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் இரு அவைகளிலும் எதிரொளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.