“அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது” - அதானி குழுமம்!
அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சூரிய ஒளிமின் நிலைய ஒப்பந்தங்களைப் பெற, கடந்த 2020 – 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் முறைகேடாக பெறப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம் அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சௌரவ் அகர்வால் உள்பட 7 பேரின் மீதும் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அதானி குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
“அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அவற்றை முற்றிலும் மறுக்கிறோம்.
அமெரிக்க நீதித்துறையே, “குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை பிரதிவாதிகள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்” என கூறியுள்ளது. எனவே அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
அதானி குழுமம் எப்போதும், அதன் செயல்பாடுகளின் அனைத்து அதிகார வரம்புகளிலும் உயர்ந்த நிலையான ஆளுமை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையை பின்பற்றுவதை உறுதி செய்திருக்கிறது. எனவே, எங்களது பங்குதாரர்கள், கூட்டாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒன்றை உறுதியளிக்கிறோம், அதாவது, அதானி குழும நிறுவனமானது அனைத்துச் சட்டங்களுக்கு உள்பட்டு இயங்குவதோடு, மிகக் கட்டுக்கோப்பான நிறுவனமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறோம்”
என்று அதானி குழும செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.