“இங்கிலாந்து உங்களுடன் நிற்கிறது” - உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று(மார்ச்.01) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது அதிபர் டிரம்ப், மக்களின் உயிர்களுடன் விளையாடாதீர்கள் என்று ஜெலன்ஸ்கியை எச்சரித்தார். இதனால் போரின்போது வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்காக உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தமும் ரத்தானது. பின்பு வெள்ளை மாளிகையைவிட்டு ஜெலன்ஸ்கி வெளியேறினார்.
தொடர்ந்து ஜெலன்ஸ்கி இங்கிலாந்து சென்றார். அப்போது அங்குள்ள மக்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். பின்பு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்தித்து பேசினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ பேச்சு வார்த்தையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதித்தோம். மேலும் இங்கிலாந்து ஒரு கடன் ஒப்பந்தம் செய்தது. இது உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும். போர் ஆரம்பித்ததில் இருந்து ஆதரவாக இருக்கும் இங்கிலாந்து மக்களும் அரசுக்ம் நன்றி” என்று கூறியுள்ளார்.
அதே போல் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “உக்ரைனுக்கு அசைக்க முடியாத ஆதரவு தருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உக்ரைனுக்கு எனது ஆதரவு அசைக்க முடியாதது. இங்கிலாந்து உங்களுடன் நிற்கிறது. ரஷ்யாவின் சட்டவிரோதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, உக்ரைனின் எதிர்கால இறையாண்மை பாதுகாக்கும் நியாயமான மற்றும் நிரந்தரமான அமைதியை உறுதி செய்யும் பாதையைக் கண்டறிய நான் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.