“ராமதாஸ் - அன்புமணி இடையே இருந்த சலசலப்பு சரியாகிவிட்டது” - தொண்டர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஜி.கே.மணி!
பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வியாழக்கிழமை அன்று கட்சியின் தலைவராகவும், நிறுவனராகவும் தானே பொறுப்பு வகிக்க உள்ளதாக அறிவித்தார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் இருப்பார் என்றும் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, தானே தலைவராக செயல்படுவேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் உள்கட்சி விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கட்சியினுள் எந்த சலசலப்பும் இல்லை என தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி,
“அனைத்து தமிழ்நாடு மக்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சித்திரை திருவிழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சித்திரை என்பது இளவேனில் காலம். முன்னோர்களின் தொடர்ச்சியாக மாமல்லபுரத்தில் மாநாடு நடத்துகிறோம். மே.11ஆம் தேதி மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக மாநாடு நடக்கும்.
மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி என அனைவரும் கலந்து கொள்வோம். அரசியலிலும், தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கும் மாநாடாக இது அமையும். கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை. சட்டத்தால் இயங்கும் ஜனநாயக நாடு இந்தியா.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது நாட்டின் மகத்துவம். அதன் அடிப்படையில் மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு சென்றதால் நமக்கு நெருடிக்கடி ஏற்பட்டுள்ளது.
ராணுவம், ரயில்வே, அஞ்சல் போன்ற முக்கிய துறைகளை மட்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். மக்களுக்கு தேவையானவற்றை செய்யும் அளவுக்கு மாநில அரசிடம் அதிகாரங்கள் இருக்க வேண்டும். இந்தியாவில் மத்திய ஆட்சி, மாநில ஆட்சி, உள்ளாட்சி என மூன்று ஆட்சி முறைகள் உள்ளன.
இந்த மூன்று ஆட்சிகளுமே மண் செழிக்க, மக்களின் வளர்ச்சிக்காக, மொழியை பாதுகாக்க உழைக்க வேண்டும். நீர் அடித்து நீர் விலகாது. கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை. ராமதாஸ், அன்புமணி இடையே சிறு சலசலப்பு இருந்தது சரியாகிவிட்டார். பாமகவில் உள்ள சலசலப்பு சரியாகிவிட்டது. விரைவில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்திப்பார்” என தெரிவித்தார்.