விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியீடு!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித் உடன் திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, ஆரவ், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத்
இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர், பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படமானது பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என்று அறிவிக்கபட்ட நிலையில், லைகா நிறுவனம் திடீரென ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் அஜித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். துணிவு திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அஜித்தின் அடுத்த படத்திற்காக அவரின் ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருக்கின்றனர்.
அடுத்த படமான குட் பேட் அக்லி ஏப்.10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் விடாமுயற்சி வெளியீடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்திற்கு சமீபத்தில் சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கியது. இந்தப் படம் 2 மணி 30 நிமிடங்களை கொண்டுள்ளது. இதன் சான்றிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் வருகிற ஜனவரி 23 அல்லது ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி விடாமுயற்சி ட்ரெய்லர் இன்று மாலை 6:40 மணிக்கு வெளியாக உள்ளது.