"கதை இன்னும் முடியல தொடங்குது பாரு" - மிரட்டும் விடாமுயற்சி படத்தின் டிரெய்லர்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித் உடன் திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, ஆரவ், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் டீசர், பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு சென்சார் குழு யூஏ சான்றிதழ் வழங்கியது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 30 நிமிடங்களை இருப்பதாக இணையத்தில் புகைப்படங்கள் வைரலானது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரின் தொடக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா உடனான காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்பு ரெஜினா கசான்ட்ரா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோரின் காட்சிகள் இடம்பெற விறுவிறுப்பாக நகர்ந்து அதிரடியான சண்டை மற்றும் கார் சேசிங் சீன்ஸ் வருகிறது.
தொடர்ந்து பின்னணியில் “இரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும் கதை இன்னும் முடிய தொடங்குது பாரு என்னைக்கும் விடாமுயற்சி...நம்பிக்கை விடாமுயற்சி வானத்தையே கிழுச்சுட்டு எவன் குதுச்சாலும் சாவுக்கு பயம் இல்ல வெடிக்கட்டும் போரு என்னைக்கும் விடாமுயற்சி...நம்பிக்கை விடாமுயற்சி ” என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இறுதியாக இப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.