"கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது" - திருமாவளவன்!
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடைபெற்றது. விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை பயணத்தில் கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது.
கடும் நெரிசலில் சிக்கி மிதிபட்டு மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும். மேலும், பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் கவலையளிக்கிறது. அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் வகையில் உயர் சிகிச்சை அளித்திட தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளைப் போர்க்காலச் சூழலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன், உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.பத்து இலட்சம் இழப்பீடாக வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்புச் செய்துள்ளது. எனினும், அத்தொகையைக் குறைந்தது தலா ஐம்பது லட்சம் என வழங்கிட முன்வரவேண்டுமென முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். காயமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.