இன்று வெளியாகிறது 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் டீசர்!
கடந்த 2005 ஆம் ஆண்டு 'அறியும் அறியாமலும்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆர்யா. அதனைத் தொடர்ந்து, நான் கடவுள், மதராசப்பட்டினம், ராஜா ராணி, டெடி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும், இவர் சமீபத்தில் வெளியான 'தி பாய்ஸ்' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
ஆர்யா தற்போது 'மிஸ்டர் எக்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்த்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார். மேலும், தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி ஜூலை மாதத்தில் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஆர்யாவின் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.