“உழவர்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி அடைந்துள்ளது” - பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு!
உழவர்களை பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாகவும், அவர்களின் நலனில் ஒரு துளியும் கண்டுகொள்ளவில்லை எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை- செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இன்று தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், உழவர்கள் என தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டிற்காக, பிரம்மாண்ட மாநாட்டுப் பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலிருந்து வரும் உழவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விவசாயிகளை ஒன்று திரட்டி இந்த மாநாட்டை பாமக நடத்துகிறது. விவசாயிகளுக்காக பாமக நடத்தும் இந்த மாநாடு பிற கட்சிகள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த விழா மேடையில் பேசினார். பின்னர் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உரையாற்றினார். அவர் பேசியதாவது,
“கடவுளின் பிள்ளைகள், பேரன்கள் தான் விவசாயிகள். உழவர்களை காக்க முடியாத அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்கக்கூடாது. இதை ஓராண்டில் நிச்சயமாக தமிழக மக்கள் செய்ய இருக்கிறார்கள். திமுக அரசை மக்கள் தூக்கி எறிய உள்ளனர். உழவர்கள் தான் அனைவருக்கும் உணவு படைக்கும் கடவுள் என்பது அவர்கள் கொள்கை. அடிப்படையில் நான் யார் என்று கேட்டால் உழவன் என்று தான் கூறுவேன்.
உழவர்கள் எதிர்கொள்ளும் 10 முக்கிய பிரச்னைகள் என்ன தெரியுமா? உழவர்கள் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காதது, அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்யப்படாதது, உழவர்கள் வருமானத்தை உயர்த்த அரசு தரப்பு நடவடிக்கை எடுக்கப்படாதது, பாசன வசதிகள் செய்து தரப்படாதது, வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யாதது, வறட்சி வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு உரிய இழப்பை வழங்கப்படாதது, விவசாயிகளுக்கான கடன் உரிய நேரத்தில் கிடைக்காதது, தோட்டக்கலை பயிர்கள் மூலிகை பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்கப்படாதது, வேளாண்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படாதது, உழவர்களின் விலை பொருட்கள் உரிய விலை கிடைக்காதது.
இந்தியாவில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். அதற்கு காரணம் பொதுத்துறை வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளிலும் கடன் கிடைக்காததால் தனி நபர்களிடம் அதிக வட்டி பெற்று அதன் மூலம் விவசாயிகள் குறித்த காலத்தில் கடனை அடைக்க முடியாமல் கடன் வலையில் சிக்கிக் கொண்டு மீண்டு வர முடியாமல் தற்கொலை செய்து கொள்வது.
வேளாண்மைக்கு முன்னுதாரணமாக இஸ்ரேல் இருக்கிறது. தண்ணீரே இல்லாத இஸ்ரேல் விவசாயத்தில் சாதித்து கொண்டிருக்கிறது. 12 ஆண்டுகளில் 8 கோடி மரங்களை இஸ்ரேல் நட்டிருக்கிறது. அந்த இஸ்ரேல் மாடல், தமிழகத்திற்கு வேண்டும். வறட்சியாலும் வெள்ளத்தாலும் தொடர்ந்து தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இஸ்ரேலை தமிழ்நாடு பின்பற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், இஸ்ரேல் மாடல் விவசாயம் வேண்டும், வேளாண்மைக்கு முன்னுதாரணம் இஸ்ரேல் தான்.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை பறிக்கக் அனுமதிக்க முடியாது. வேளாண்மை கல்வி ஆராய்ச்சி ஊக்குவிக்கப்பட வேண்டும். உழவர்களை பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் உழவர்களின் வாக்குகளை பெருமளவில் வாங்கி தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் உழவர்களின் நலனில் ஒரு துளியும் கண்டுகொள்ளவில்லை. உழவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.
பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டமே அவர்களின் உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராக சரண் சிங் இருக்கிறார். பல்வேறு பதவிகளை வகித்த போதும், சரண் சிங் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தார். விவசாயிகள் தான் சரண் சிங்கின் பலம். சரண் சிங் எதைச் சொன்னாலும், அதை விவசாயிகள் கேட்டார்கள். என்னைப் போல அதிகாரத்திலும் இல்லாத போதும், சரண் சிங் விவசாயிகளுக்காக போராடினார்.
உத்தரபிரதேசத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் மூன்று சட்டங்களை விவசாயிகளுக்காக கொண்டு வந்தவர் சரண்சிங் சவுத்ரி. தமிழகத்தில் ஏற்படும் வறட்சி செயற்கையாக ஏற்படுத்தப்படும் ஒன்றாகும். தண்ணீர் மேலாண்மை கீழே தமிழ்நாடு இருப்பது என்பது கவலையளிக்கிறது. மணல் தண்ணீர் கொள்கையை தமிழக அரசு தடுக்காவிட்டால் தாமிரபரணி, வைகை, காவேரி, தென்பெண்ணை ஆறு, பாலாறு ஆகிய 5 ஆறுகள் அழிந்து போகும் நிலை உருவாகும்.
விவசாயிகளுக்கான போராட்டம் சென்னையில் போர் நினைவுச் சின்னம் என்ற இடத்தில் இங்கே கூடியுள்ளது போல் 10 மடங்கு விவசாயிகள் முற்றுகிடுவார்கள். 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெறும். 2025 ல் போராட்டத்திற்கு தேதியை அறிவிப்பேன்” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.