முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை!
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என குற்றம் சாட்டி உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜன.8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11ம் தேதி பதிலளித்தார். மொத்தம் 6 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.10) நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.