சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து | #SupremeCourt உத்தரவு!
யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது 2-வது முறையாக தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின் போது சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து, வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ம் தேதி தேனியில் போலீசார் கைது செய்தனர். கைதின்போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட, அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதனை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆக. 9ஆம் தேதி அன்று ரத்து செய்தது. இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையில், ஆட்சியர் ஷஜீவனா உத்தரவில் கைதின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பதியப்பட்டது.