“பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை!” - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!
பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை அவர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான - மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது.
பாஜக, தனது அணியில் இருக்கும் பாமகவை நிறுத்தியது. 'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பாமக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை. தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக பரப்புரையை பாஜக அணி செய்தது.
இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து திமுக தலைமையகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக தனது ட்விட்டர் (X) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். அதில், எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்! எனக்கூறி வெற்றிக்கொண்டாட்ட காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.