10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி... கமல்ஹாசன் செய்த நெகிழ்ச்சி செயல்!
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கோகிலாம்பாள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி வி. சோபியா 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார். தமிழில் 99 மதிப்பெண்களும், பிற பாடங்களில் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ள மாணவி சோபியாவின் தந்தை அரசுப் பேருந்து நடத்துனர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மாணவி சோபியாவை வீடியோ காலில் அழைத்து வாழ்த்தினார். அப்போது கமல் ஹாசன் பேசியதாவது, "உங்களுக்கு எனது வாழ்த்துகள். நீங்கள் செய்திருப்பது பெரிய சாதனை. அதனைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்களது மேற்படிப்புக்கான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன். உங்கள் கனவைச் சுருக்கிக்கொள்ள வேண்டாம். என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற ஆலோசனையைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
உங்களுக்காக நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரிக்கிறேன்.
நீங்கள் பெற்ற மதிப்பெண்களைப் பார்த்தேன். என்னுடைய பள்ளிக்காலத்தில் நான் இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்ததில்லை. எடுக்கிறவர்களையும் பார்த்ததில்லை. நன்றாகப் படிக்கிறவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்கும். நீங்கள் பணத்தைப் பற்றி எந்தக் கவலையும் படாதீர்கள்" என்றார்.
தொடர்ந்து ஆசிரியர்களிடம் பேசியபோது, "கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதில் ஆசிரியர்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பற்றித்தான் எங்கும் பேசுகிறார்கள். எல்லா மாணவர்களையும் முன்னிலை பெறச் செய்யுங்கள். அதைச் சாதிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது" என்றார்.