நீட்தேர்வில் 705 மதிப்பெண்கள் எடுத்த மாணவி, +2 தேர்வில் இரண்டாம் முயற்சியிலும் தோல்வி! நடந்தது என்ன?
நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் எடுத்த குஜராத் மாணவி பிளஸ்2 துணைத் தேர்விலும் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி, நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் மீண்டும் எழுதிய துணைத் தேர்விலும் தோல்வியடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வில் குஜராத்தை சேர்ந்த மாணவி இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தோல்வியைத் தழுவினார். இதனையடுத்து மீண்டும் ஜூன் மாதம் நடத்தப்பட்ட துணைத்தேர்விலும் தோல்வியடைந்துள்ளார். இதனால் கல்லூரியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் நடந்த தேர்வில் இயற்பியல் பாடத்தில் வெறும் 21 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், தற்போது துணைத் தேர்வில் 22 மதிப்பெண்கள்தான் பெற்றுள்ளார்.
வேதியியல் பாடத்தில் மார்ச் மாதத் தேர்வில் 31 மதிப்பெண்கள் எடுத்திருந்தவர், தற்போது 33 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மாணவிதான், குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவராக அறியப்படுகிறார். அவர் இயற்பியலில் 99.89 சதவிகிதம், வேதியியலில் 99.14 சதவிகிதம், உயிரியலில் 99.14 சதவிகிதம் எடுத்திருக்கிறார். இந்த மதிப்பெண்ணுக்கு அவர் நாட்டில் உள்ள மிகப்பெரிய மருத்துவக் கல்லூரியில் இலவசமாகவே மருத்துவம் பயில முடியும். ஆனால் அவர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாததால், மேற்படிப்புக்காக கல்லூரிகளில் சேர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு மதிப்பெண்கள் முக்கியம் எனக்கூறும் மத்திய அரசு, தற்போது இந்த பெண்ணுக்கு கல்லூரியில் சேர்க்கை அளிக்குமா? என நீட் தேர்வில் தோல்வியடைந்த சக மாணவ, மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் பொதுத்தேர்வில் தேர்ச்சியடைய முடியாத பெண்ணால், நீட் தேர்வில் எவ்வாறு 705 மதிப்பெண்கள் எடுத்திருக்க முடியும்? இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்கான பதிலையும் நீட் தேர்வே கூறுகின்றது. அது என்னவென்றால், நீட்டுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் பலரும் தங்கள் பாடங்களில் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. மேலும் வருடம் முழுவதும் நீட்டுக்காக பயிற்சி பெறும் இவர்கள், பொதுத் தேர்வுகளுக்காக கடைசி ஒரு மாதம் மட்டுமே பாடத்திட்டத்தில் கவனம் செலுத்துகின்றனர். இதுவே இந்த நிலைக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.