Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திட்டமிட்டபடி நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும்” - சிஐடியு தலைவர் சௌந்தராஜன் அறிவிப்பு!

06:06 PM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டப்படி நாளை வேலை நிறுத்தம் நடைபெறும் என சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தன.

இதையடுத்து, வேலை நிறுத்தபோராட்டத்தினை கைவிட வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு இரண்டு முறை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் நல ஆணையர், போக்குவரத்துக் கழகங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இரண்டு முறையும் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில்  முடிந்தது. இந்நிலையில், இன்று போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், சென்னை பல்லவன் இல்லத்தில் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாநகர் போக்குவரத்துக் கழக மேலான் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த முறையும் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில். சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தராஜன் செய்தியாளர்களை

சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அரசு சார்பில் எங்களது கோரிக்கை எதுவும் ஏற்கப்படவில்லை. எப்போது பேசினாலும்
பொங்கலுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என அரசு கூறுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள
எந்த ஒரு பொதுத்துறை நிர்வாகிகளுக்கும் ஏற்படாத அநீதி, போக்குவரத்து துறை
ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எங்களுடைய உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம். ஆனால், அரசு எங்களுடைய கோரிக்கையை செவிசாய்க்க மறுக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்க வேண்டுமென்றால்  எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மற்ற அரசு தொழிலாளர்களைப் போலவே போக்குவரத்து தொழிலாளர்களையும் நடத்த வேண்டும். இரண்டாம் தர ஊழியர்கள் போலவே போக்குவரத்து ஊழியர்களை அரசு நடத்தி வருகிறது. வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என சொல்வதற்கு அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையைக் கூட அரசு கொடுக்காமல் தொடர்ந்து மறுத்து வருகிறது. வேலை நிறுத்தத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது. ஏழை போக்குவரத்து தொழிலாளிகளை அரசு ஏமாற்றி வருகிறது. ஆறு
கோரிக்கையில் ஒரு கோரிக்கையையாவது நிறைவேற்ற வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தோம்.

ஆனால், அதை கூட அரசு ஏற்கவில்லை. இதுகுறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அரசு எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், நாளை தமிழ்நாட்டில் ஒரு பேருந்து கூட இயங்காது. ஒட்டு மொத்த தொழிலாளர்களும் நாளை வாகனங்களை இயக்க மாட்டார்கள். திமுகவை சேர்ந்த தொழிற்சங்கங்களே எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும். போராட்டம் நடைபெறாமல் இருப்பது அரசின் கையில் தான் உள்ளது என தெரிவித்தார்.

Tags :
Bus DriversBus StrikeCITUNews7Tamilnews7TamilUpdatesSETCSoundararajanTNSTC
Advertisement
Next Article