ஸ்ரீமதுர காளியம்மன் கோயில் திருநடன உற்சவம் கோலாகலமாக தொடங்கியது!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் புகழ்பெற்ற மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில் புகழ்பெற்ற ஸ்ரீமதுர காளியம்மன் கோயில் 96ஆம் ஆண்டு திருநடன உற்சவம் கடந்த மார்ச் 17ஆம் தேதி காப்புகட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து இன்று (மார்ச் 25) காலை விஷேச பூஜைகளுடன் 100க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் மங்கல வாத்தியங்களுடன் அம்பாள் திருநடன உற்சவம் தொடங்கியது.
இதில், ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி பெருந்தலைவர் ம.க ஸ்டாலின் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகின்ற ஏப்ரல் 4ம் தேதி அம்பாள் ஊஞ்சல் உற்சவமும் ஏப்ரல் 2 ஆம் தேதி ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து அழகு காவடிகளுடன் 1008 பால்குடம் ஊர்வலமும் நடைபெற உள்ளது.
மேலும் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.