“களத்தில் இருந்து பதிலளிப்பது தான் சாம்பியன்களின் அடையாளம்” -வினேஷ் போகத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து!
ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் வினேஷ் போகத். அவருக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
“உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீரர்களை ஒரே நாளில் தோற்கடித்த வினேஷுடன் ஒட்டுமொத்த நாடும் இன்று நெகிழ்ச்சி அடைகிறது.
வினேஷ் மற்றும் அவரது சகாக்களின் போராட்டத்தை மறுத்தவர்கள், அவர்களின் நோக்கம் மற்றும் திறமைகள் குறித்து கேள்வி எழுப்பியவர்கள், அனைவருக்கும் இன்று பதில் கிடைத்துள்ளது. இந்தியாவை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளின் முன் உடைந்து போனது.
இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்து தங்கள் பதிலைத் தருகிறார்கள். வாழ்த்துகள் வினேஷ். பாரிஸில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது” இவ்வாறு ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை.
முதல் மூன்று நிமிடங்களில் ஒரு பாயின்ட் ஸ்கோர் செய்த வினேஷ் போகத், அடுத்தடுத்த 5 பாயின்ட்களை குவித்தார். ஆட்டத்தில் இறுதியில் 5-0 என்ற கணக்கில் யூஸ்னிலிஸ் குஸ்மேனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் வினேஷ் போகத்.