“மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை!” - அகிலேஷ் யாதவ் பேட்டி
மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:
மதம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை. ஆனால் நாம் பேச வேண்டியது சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துதான். அதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதைவிடுத்து யாரேனும் மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினால், அதையெல்லாம் நீங்கள் ஊடகங்களில் காட்டாதீர்கள்.” என்று கூறினார். முன்னதாக, அக்கட்சியைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மௌரியா கடவுள் குறித்த விமர்சனத்தை முன்வைத்திருந்தார். உலகில் உள்ள எல்லோரும் இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள் என்று இருக்கும்போது சில கடவுள்களுக்கு மட்டும் எப்படி நான்கு கைகள் இருக்கும் என்று பேசினார்.
மேலும், அறிவியல் நடைமுறைக்கேற்ப தான் அவ்வாறு பேசியதாகவும், கற்பனையில் மட்டுமே நான்கு கைகளுடன் கூடிய குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர் கூறினார். அவரின் கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மதம் தொடர்பான பேச்சுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று பதிலளித்தார்.