தஞ்சையில் கேள்விக்குறியாகும் 40 கிராமங்களின் பாதுகாப்பு... மணல் அள்ளும் அனுமதியை ரத்து செய்யுமா நீதிமன்றம்?
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்,
“இரு ஆற்றுப்பகுதிக்கு இடையே திருவைகாவூர் கிராம பஞ்சாயத்து அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 60 அடி உயர மணல்மேடு, நத்தம் புறம்போக்கு பகுதியில் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது இப்பகுதியில் உள்ள 40 கிராமங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பது இந்த குன்றே. இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ராமநாதன் என்பவர் இப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெற்றார்.
அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரிடம் அனுமதி பெற்று, மணல்மேடு பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மணல் எடுக்கப்பட்டு நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதியில் இருக்கும் கிராம மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஏராளமான போராட்டங்களை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
ஆகவே கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உள்ள மணல்மேடு பகுதியில் மணல் அள்ள வழங்கிய அனுமதியை ரத்து செய்து, உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு,
வெள்ளம் ஏற்படும் போது, இது கிராம மக்களுக்கு மிகுந்த பிரச்னை ஏற்படும் என கருத்து தெரிவித்து, வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.