கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே 'டாக்குமென்ட்ரி படம்' எடுக்க முயற்சி - ரஷ்யாவைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே 'டாக்குமென்ட்ரி' படம் எடுக்க முயன்ற ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஒன்பது பேரிடம் கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ரஷ்யாவின் அணுசக்தி துறைக்கு சொந்தமான 'ரோசோட்டம்' எனப்படும் ரஷ்ய அணுசக்தி
ஏற்றுமதி கழகத்தைச் சார்ந்த சிஸ்லோவா இரினா தலைமையில் அண்டன் மினியோவ், அலெஸ்சாண்டர் சேவட்சோ, டிமிட்ரி டர்பின், அலெக்ஸ் யூனோவ், அண்டன் படுனோவ் உட்பட 6 ரஷ்யர்கள் கூடங்குளம் அணு உலைக்கு கிழக்கு பகுதியில் புகைப்படம் எடுத்தனர். கூடங்குளம் போலீசார் சந்தேகமடைந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அணு உலை குறித்து 'டாக்குமென்ட்ரி' படம் எடுப்பதற்காக வந்துள்ளதாக அவர்கள் போலிசாரிடம் தெரிவித்தனர்.
மேலும் இவர்களுக்கு வள்ளியூர் பகுதியை சேர்ந்த இளங்கோ, தினேஷ் தளவாய் மற்றும் திருவனந்தபுரத்தைச் சார்ந்த கார் ஓட்டுநர் சஜிப் ஆகியோர் உதவி செய்ததும் தெரியவந்தது. 'டாக்குமென்ட்ரி' படம் எடுப்பதற்கு முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது பற்றி ரஷ்யாவை சேர்ந்தவர்கள் உட்பட 9 பேரிடமும் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்கள் எடுத்த ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு பின்பு அவர்களை விடுவித்தனர். இச்சம்பவம் கூடங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பு
ஏற்படுத்தியது.