’எல்ஐகே’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் மூலம் இயக்குநாராக அறிமுக பிரதீப், அடுத்தடுத்து கதாநாயகனாக நடித்த ’லவ் டுடே’ மற்றும் ’டிராகன்’ ஆகிய படங்கள் பெரும் வெற்றியடைந்து 100 கோடி கிளப்பில் சேர்ந்தன.
இதனை தொடர்ந்து அவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’லவ் இன்சுரன்ஸ் கம்பெனி’, மற்றும் இயக்குநர் கீர்த்தீஷ்வரன் இயக்கத்தில் ’டியூட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் எல்ஐகே திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், அதே நாளில் டூட் திரைப்படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தீபாவளி வெளியீட்டில் எந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் எல்ஐகே திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
“இரண்டு ரயில்கள் ஒரே பாதையில், எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால், அது பேராபத்தில் தான் முடியும். எனவே அதை தவிர்க்கும் பொருட்டு,
மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்திஸ்வரன் அறிமுகமாகும் 'டூட்' படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் திரைப்படத்தை 2025 டிசம்பர் 18 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.