போதையில் பத்திரப் பதிவை ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் தாமதப்படுத்துவதாக புகார்.. குடும்பத்துடன் விவசாயி தர்ணா...
ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் குடிபோதையில் இருந்ததாகவும், பத்திரப்பதிவை தாமதப்படுத்துவதாகவும் கூறி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு விவசாயி தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரு நாளைக்கு பத்து முதல் 15க்கு மேற்பட்ட பத்திரப்பதிவிற்காக பொதுமக்கள் அன்றாடம் வந்துசெல்வர். ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளராக இளம்பருதி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் ஒரு நாளைக்கு 5 பத்திரத்திற்கு மேல் பதிவு செய்வதில்லை என அப்பகுதியில் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
மேலும், சார்பதிவாளர் வேலை நேரத்தில் எப்பொழுதும் குடிபோதையில் இருப்பதாகவும், இதனால் பத்திரப் பதிவுகள் தாமதமாக நடக்கின்றன எனவும் மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த நடராஜன் என்பவர் தனது குடும்ப சொத்துகளை உடன் பிறந்தவர்களுக்கு சமமாக பிரித்து கொடுப்பதற்காக நேற்று (மே 17) காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து மாலை 5 மணி வரை காத்திருந்த விவசாயி நடராஜன், தாம் எழுதிய பத்திரத்தை சார் பதிவாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த சார்பதிவாளர் அதை வாங்கி படிக்காமலேயே பத்திரத்தில் தவறு உள்ளதாக கூறி, பத்திரத்தை திருத்த கூறியதாக தெரிகிறது. நீண்ட நேரம் காத்திருந்த விவசாயி நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்து சார்பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த உறவினர்கள் இது தொடர்புடைய மேல் அதிகாரியிடம் தெரிவித்து சார்பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
“நான் எங்களது அண்ணன், தம்பி அனைவரும் சொத்துக்களை சம பங்காக பிரித்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்து பதிவு செய்ய வந்தோம். கடந்த 9-ம் தேதி அளவில் நான் பதிவு செய்வதற்கான ஆன்லைன் டோக்கன் போட்டு முன்பதிவு செய்து இருந்தேன். முதல்முறை, பத்திரத்தை பதிவுத்துறை அலுவலகத்தில் கொடுத்தபோது, சார் பதிவாளர் இளம்பருதி பத்திரத்தை முறையாக பார்க்காமல் பத்திரத்தில் நிறைய பிழைகள் உள்ளது. இது பதிவு செய்ய இயலாது என திருப்பி அனுப்பி விட்டார்.
அதன் பின்னர் பத்திர எழுத்தாளரிடம் சென்று கேட்ட பொழுது, பத்திரத்தை முழுவதும்
பரிசீலனை செய்து பார்த்துவிட்டு பத்திரம் சரியாகத்தான் உள்ளது. இதில் எந்த
தவறும் இல்லை எனக்கூறி, திருப்பி கொண்டு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள் என அனுப்பி வைத்தார்.
சார் பதிவாளர் அலுவலகத்தில் வந்து கொடுத்த பொழுது, பத்திரத்தை படித்துப் பார்த்த அனைவரும் பதிவாளர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டும் கைரேகை, கையெழுத்துகளையும் பெற்றுக் கொண்டு சார்பதிவாளர் இடம் அனுப்பினர். நாங்கள் அரசாங்கத்திற்கு முழுவதுமாக பணத்தைக் கட்டி விட்டோம். இந்த பத்திரத்தை நாங்கள் எங்கு எடுத்துச் சென்று பதிவு செய்வது? யாரிடம் புகார் செய்வது? என்று எங்களுக்கே தெரியவில்லை. நாங்கள் என்ன செய்வது என்றே எங்களுக்கு புரியவில்லை” என நடராஜன் தெரிவித்தார்.