“சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்து வீசியதே வெற்றிக்கு காரணம்” - இந்திய வீரர் முகமது ஷமி!
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் முகமது ஷமி தனது வெற்றிக்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் சில லீக் ஆட்டங்களில் அணியில் பிளேயிங் லெவனில் இடம் பெறாத முகமது ஷமி அதன்பின் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்திக் கொண்டார். தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் விளங்குகிறார்.
வெறும் 6 போட்டிகளில் விளையாடி, அவர் இதுவரை 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு 4 விக்கெட்டுகளும், மூன்று 5 விக்கெட்டுகளும் அடங்கும். நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் அவர் வலம் வருகிறார். விக்கெட்டுகள் எடுப்பது மட்டுமின்றி குறைந்த ரன் எகானமியுடன் அவர் பந்துவீசியுள்ளார். அவரது பந்துவீச்சு எகானமி 5.01 ஆகும்.
இந்நிலையில், பந்துவீச்சில் வெற்றிகரமாக செயல்படுவதன் காரணம் குறித்து, முகமது ஷமி மனம் திறந்துள்ளார். பந்துவீச்சில் வெற்றிகரமாக செயல்படுவது குறித்து அவர் பேசியதாவது:
"நான் எப்போதும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பந்துவீசுவேன். விக்கெட் எப்படி இருக்கிறது. பந்து ஸ்விங் ஆகிறதா, இல்லையா என்பதை கவனித்து பந்துவீசுவேன். பந்தில் ஸ்விங் இல்லையென்றால், நான் ஸ்டம்பை குறிவைத்து பந்துவீசுவேன். ஸ்டம்பை குறிவைத்து வீசும் பந்துகளை பேட்ஸ்மேன்கள் விளையாட முற்படும்போது விக்கெட் கிடைக்கும்" என்றார்.
உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிகமுறை (3 முறை) 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் முகமது ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.