Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்றத்தை பரபரப்பாக்கிய மேற்கோள் - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பெரியார் கூறியது என்ன?

12:01 PM Dec 12, 2023 IST | Jeni
Advertisement

நாடாளுமன்றத்தில் பெரியாரின் மேற்கோள்கள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பெரியார் கூறியது என்ன என்பது பற்றி காணலாம்.

Advertisement

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.  இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட்  தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.  ஜம்மு காஷ்மீருக்கான 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தது செல்லும் என்று  நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.  இந்தியாவுடன் இணைந்த பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு எந்த சிறப்பு அந்தஸ்தும் இல்லை என்றும்,  குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் போது மாநிலங்கள் யூனியன் பிரதேச அதிகாரத்தில் வந்து விடும் என்றும்,  மாநிலத்தின் செயல்பாட்டுக்காக குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை பயன்படுத்துவதை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

அவசர சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது என்றும் இதன்மூலம், சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது தான் என்ற முடிவுக்கு வருவதாகவும்,  ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையை கலைத்த பிறகும்,  சட்டப்பிரிவு 370 குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே என தெரிவித்த தலைமை நீதிபதி,  ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும்,  லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் என்றும் கூறினார்.  மேலும் ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பு இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டது என தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீருக்கு அடுத்தாண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஜம்மு - காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

இதனிடையே மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதாவை நேற்று தாக்கல் செய்தார்.  ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை இடங்களை அதிகரிப்பதுஎஸ்.சிஎஸ்.டி பிரதிநிதித்துவம் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றிருந்தன. 

இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் எம்.எம் அப்துல்லா 'ஒவ்வொரு இனத்துக்கும் தங்கள் சொந்த விதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமை இருக்கிறது. அது காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும்...  என கூறியதோடு தந்தை பெரியார் என்று பேசினார்.

 

திமுக உறுப்பினர் அப்துல்லா, மேற்கோள் காட்டிய தந்தை பெரியாரின் கருத்து மாநிலங்களவையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.  பாஜக எம்பிக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  திமுக உறுப்பினர் அப்துல்லாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தங்கர்,  "இந்த வாரத்தைகள் அரசியலமைப்புக்கு எதிரானது.  அவற்றை பொறுத்துக் கொள்ள முடியாது. பேச்சு சுதந்திரம் என்பது சில வரம்புகளுக்கு உட்பட்டது என்றார்.  மேலும் திமுக உறுப்பினர் அப்துல்லாவின் பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் எழுந்து "திமுக உறுப்பினர் பெரியார் மேற்கோளைப் பயனபடுத்துவதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்தி ஐம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என்றார்.  மேலும் ஒவ்வொரு இனமும் தங்களது தலைவிதியை தீர்மானித்துக் கொள்ள உரிமை உண்டு என தந்தை பெரியார் குறிப்பிட்டிருக்கிறார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  "திருச்சி சிவா திமுகவின் பிரதிநிதியாக பேசுகிறாரா? அல்லது ஒட்டுமொத்த இந்தியா கூட்டணிக்காக பேசுகிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.  இதற்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனையடுத்து பெரியார் மேற்கோள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பெரியார் கூறியது என்ன?

இந்த சூழலில் காஷ்மீர் குறித்து பெரியார் என்ன கூறினார் என்பது சமூகவலைதளத்தில் தேடுபொருளாகியுள்ளது.

1951-ம் ஆண்டு அக்டோபர் 12-ல் பெரியாரால் நடத்தப்பட்டு வந்த விடுதலை இதழின் தலையங்கத்தில்,  “காஷ்மீரைப் பற்றி முடிவு செய்யும் விஷயத்தை காஷ்மீர் மக்களுக்கு விட்டு விட வேண்டும்.  காஷ்மீருக்குள் புகுந்திருக்கும் இந்தியாவும் வெளியேற வேண்டும், பாகிஸ்தானும் வெளியேற வேண்டும்.  இது தான் காஷ்மீர் மக்களுக்கு செய்யும் நீதியாகும்” என்று  பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

“காஷ்மீர் பிரச்னை குறித்து பேசுவதற்கு நாம் யார்,  இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அந்த உரிமை இல்லை.  காஷ்மீரிகளுக்கே அதை தீர்மானிப்பதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன.  அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க நாம் அவர்களை அனுமதிக்க வேண்டும்.  காஷ்மீரின் இந்திய ஆக்கிரமிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும். காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும்.  இது மட்டுமே காஷ்மீரிகளுக்கு நீதி வழங்கும்” என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
#Article370JammuKashmirparliamentperiyarState
Advertisement
Next Article