"கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்" - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!
நாட்டின் 79வது சுதந்திர தினம் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் கடந்த ஆண்டின் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட காரைக்காலில் உள்ள TR பட்டினம் காவல் நிலையத்திற்கு விருது மற்றும் ரூபாய் 25000 ரெக்கப்பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து காவல் துறை, மாணவர் படை உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பல்வேறு பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனிடையே சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரியின் மரப்பாலத்திலிருந்து முள்ளோடை வரை உள்ள கடலூர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 50 எம்எல்டி கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் 500 கோடியில் தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரி விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் 12 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், பெண் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் அரவணைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக பிறந்த 5884 பெண் குழந்தைகளுக்கு இதுவரை தலா 50 ஆயிரம் வீதம் ரூ. 29.42 கோடி வைப்பு தொகையாக செலுத்தப்பட்டுள்ளது.
அரசின் எந்த வித நிதி உதவியும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகை இதுவரை 70 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இத்திட்டம் அனைத்து குடும்ப தலைவிக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை செயலர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.